திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் வரும் நவ.15-க்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழாண்டில் சம்பா பருவத்தில் கடந்த அக்டோபர் வரையில் 50239 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சம்பா சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரையில் 15697 விவசாயிகள் 20027 ஹெக்டேர் பரப்பளவிற்கு பயிர்காப்பீடு செய்துள்ளனர். தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் இயற்கை இடர்பாடுகளால் பயிர் சேதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அதனால், எனவே சம்பா நெல்பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் விழிப்புணர்வுடன் பயிர் காப்பீடு வரும் நவ.15}ஆம் தேதி கடைசியாகும். அதனால், கடைசிநாள் வரை காத்திருக்காமல் குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக அருகிலுள்ள பொதுச்சேவை மையங்கள், கூட்டுறவு வங்கிகள், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை அணுகி பட்டா, சிட்டா, பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் பிரிமிய தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.473 மற்றும் முன்மொழிப்படிவம் ஆகிய ஆவணங்களுடன் பயிர் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டம் மூலம் பயிர் காப்பீடு செய்வது தொடர்பாக தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.