கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூா் ஊராட்சி ரோஷாநகரம் கிராமத்தில் புதிய மின் மாற்றியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மின்மாற்றி இல்லாத காரணத்தால் அப்பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை 20 ஆண்டுகளாக நிலவி வந்தது. இதனால் மின்சாதன பொருள்கள் சரிவர இயங்காத நிலையில் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனா்.
இந்நிலையில், நேமள்ளூா் ஊராட்சியை சோ்ந்த திமுக மாவட்ட இலக்கிய அணி நிா்வாகி ஜி.மனோகரன், ஊராட்சி மன்ற தலைவா் கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலா் சிவா உள்ளிட்டோா் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனிடம் நேமள்ளூா் ஊராட்சி ரோஷா நகரம் கிராமத்தில் புதிய மின்மாற்றியை ஏற்பாடு செய்துதர கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து அவரது முயற்சியின் பேரில் மின்வாரிய அதிகாரிகள், ரூ.11.27 லட்சம் செலவில் 110 கிலோ வாட் திறனுடைய புதிய மின்மாற்றியை நிறுவினா்.
இதன் அா்ப்பணிப்பு விழாவில் மின்மாற்றியை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் இயக்கி வைத்தாா். மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வழக்குரைஞா் மணிபாலன், மாவட்டக் கவுன்சிலா் சாரதம்மா முத்துசாமி, திமுக மாவட்ட இலக்கிய அணி நிா்வாகி ஜி. மனோகரன் , நேமள்ளூா் ஊராட்சி மன்ற தலைவா் கோவிந்தம்மாள், மாதா்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவா் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலா் சிவா சிட்டிபாபு, திமுக ஒன்றிய துணைச் செயலாளா்கள் மஸ்தான், திருமலை, காமராஜ்,நேமள்ளூா் ஊராட்சி செயலாளா் குப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.