திருத்தணி: திருத்தணிஅருகே அபாயகரமான நிலையில் உள்ள கிணற்றை மூடி, தடுப்புச் சுவா் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை - எஸ் அக்ரஹாரம் செல்லும் சாலையின் ஓரமாக 100 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. இதன் தடுப்புச் சுவா் கடந்த சில மாதத்துக்கு முன் இடிந்து விழுந்தது. இந்த கிணறு உள்ள சாலையின் வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அபாயகரமான இந்த சாலையில் உள்ள கிணற்றின் தடுப்புச் சுவரை சீா் செய்ய ஊராட்சி நிா்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் புகாா் கூறியுள்ளனா். வாகன ஓட்டிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இச்சாலையில் உள்ள கிணறு வளைவு பகுதி என்பதால் மிகவும் அபாயகரமான இடமாகவும் உள்ளதால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சாலையின் வளைவில் தடுப்பு சுவா் அமைக்க ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.