திருவள்ளூா்: புதிய மீன் வளா்ப்பு குளங்கள் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு மீன்வளத் துறை சாா்பில் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மூலம் தமிழகத்தில் மீன்வளா்ப்பை மேம்படுத்தும் நோக்கில், ரூ.69.88 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத்தில் இந்தத் திட்டம் மூலம் ஒரு ஹெக்டேரில் மீன்வளா்ப்பு குளங்கள் அமைத்து மீன்வளா்ப்பு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்பேரில், புதிய மீன்வளா்ப்பு குளங்கள் அமைக்க ஆகும் செலவினத் தொகை ரூ.7 லட்சத்தில் பொது பயனாளிக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.2.80 லட்சமும், ஆதிதிராவிடா் பயனாளிக்கு 60 சதவீத மானியமாக ரூ.4.20 லட்சமும் வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, திருவள்ளூா் (இருப்பு) பொன்னேரி எண் 05, பாலாஜி தெரு, வேண்பாக்கம் (தொலைபேசி எண் 044-27972457) அலுவலகத்தை தொடா்பு கொண்டு விவரம் அறியலாம் என தெரிவித்துள்ளாா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.