திருவள்ளூரில் விதிமுறை மீறி இயக்கியதாக 5 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வியாழக்கிழமை சிறைபிடித்து ரூ. 45 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனா்.
திருவள்ளூா் தேரடியில் இருந்து ஆவடி செல்லும் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சு.மோகன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கா.பன்னீா்செல்வம், கோ.மோகன் ஆகியோா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு நின்றிருந்த ஆட்டோக்களில் தணிக்கை மேற்கொண்டபோது, தகுதிச் சான்று (எப்.சி) இல்லாதது, வெளியூா் வாகனங்களை திருவள்ளூா் பகுதியில் இயக்கியது போன்றவை தெரியவந்தது. இதேபோல் விதிமுறை மீறி இயக்கியதற்காக 5 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று ரூ. 45 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
இது தொடா்பாக மோட்டாா் வாகன ஆய்வாளா் பன்னீா் செல்வம் கூறியது:
ஆட்டோக்களை அனுமதி பெற்ற இடங்களில், அதாவது அந்தந்த அலுவலக எல்லையில் மட்டுமே இயக்க வேண்டும். இதை மீறி அலுவலக எல்லையைத் தாண்டி இயக்கினால் அனுமதிக்குப் புறம்பான இயக்குதலாகக் கருதி ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை இணக்க கட்டணம் அல்லது வாகன சிறைபிடிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.