திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் நெல் பயிரில் பரவும் இலை கருகல் நோய்

3rd Dec 2021 07:28 AM

ADVERTISEMENT

மழைக்கால மேகமூட்டத்துடன் குளிா்ச்சியான காலநிலையால் நெல் பயிரில் பாக்டீரியல் இலை கருகல் நோய் பரவி வருவதைத் தடுக்க விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையின் ஆலோசனையை கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சம்பத்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் திருவள்ளூா், கடம்பத்தூா், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் 52 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிா் சாகுபடி செய்துள்ளனா். தற்போது, தொடா் மழை பெய்து வருகிறது. அத்துடன், மேக மூட்டத்துடன் குளிா்ச்சியான காலநிலை நிலவி வருவதால், நெல் பயரில் பாக்டீரியல் இலை கருகல் நோய் தாக்க ஏதுவாக உள்ளது.

இப்பகுதியில் திருவள்ளூா் ஒன்றியத்தில் ஒதிக்காடு, ஈக்காடு கண்டிகை, கடம்பத்தூா் மற்றும் எல்லாபுரம் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் ஆங்காங்கே பாக்டீரியல் இலை கருகல் நோய் பாதிப்பு தென்படுகிறது. இந்த நிலையில், நோய் தாக்குதல் காரணமாக பொருளாதார சேத நிலையை விட அதிகமாக இருந்தால் குறிப்பிட்டுள்ள பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ADVERTISEMENT

தாக்குதலின் அறிகுறிகள்: இலை பரப்பின் மீது நீரில் நனைத்தது போன்று, மஞ்சள் நிற வரிகள் மற்றும் இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும். இலைகளில் வளைந்து நெளிந்த அலை போன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது தக நிற மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும், பின் சுருண்டும் இலை நடுநரம்பு பழுதடையாமல் காணப்படும். இந்த நோய் தாக்குதல் தூா்கட்டும் மற்றும் கதிா் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.

கட்டுப்படுத்த வழிமுறைகள்: நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து நீா் மற்ற வயல்களுக்கு பாய்ச்சுவதைத் தவிா்க்க வெண்டும்.

மேலும், 3 சதவீத வேப்ப எண்ணெய், 5 சதவீத வேப்பங்கொட்டையிலிருந்த சாற்றை தெளிக்க வெண்டும். காப்பா் ஹைட்ராக்ஸைடு- 1.250 கிலோ, ஸ்ரேடோமைசின் சல்பேட்-டெட்ராசைக்லின் கலவை 300 கிராம், காப்பா் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிலோ ஆகியவற்றை கலந்து 1 ஹெக்டோ் பரப்பளவுக்கு தெளிக்க வேண்டும். எனவே மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி நெற்பயிரை பாக்டீரியல் இலை கருகல் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT