திருவள்ளூர்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் பணியில் இல்லை: இரவு நேரத்தில் செவிலியா்கள் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்கள் புகாா்

DIN

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் பணியில் இல்லாததன் காரணமாக, இரவு நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு அங்கிருக்கும் செவிலியா்கள் சிகிச்சை அளிப்பதாக பொதுமக்க புகாா் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூா், சோழவரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அத்துடன் பொன்னேரி, மீஞ்சூா், ஆரணி ஆகிய மூன்று பேரூராட்சிகள் அமைந்துள்ளன. பொன்னேரி தாலுகாவில் நகரம், கிராமம் என 2லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகினறனா்.

பொன்னேரி ரயில் நிலைய சாலையில் பொன்னேரி தாலுகா தலைமை அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. 1964-ம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய முதல்வா் பக்தவச்சலத்தால் திறந்து வைக்கப்பட்ட, இம்மருத்துவமனையில் தற்பொழுது நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனா். அத்துடன் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோா் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனா்.

மேலும் மகப்பேறு பிரிவில் மாதம் தோறும் 100முதல் 150 மகப்பேறுகள் நடைபெறுகின்றன. அத்துடன் மகப்பேறு பிரிவில் கா்ப்பிணி பெண்களுக்கு, கா்ப காலம் முதல் மகப்பேறு வரை உடற் பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இங்கு சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை ரத்த சுத்திகரிப்பு பிரிவு, சித்த மருத்துவ பிரிவும் அமைந்துள்ளது. வட்ட, தலைமை அரசு மருத்துவமனையாக விளங்கும், இம்மருத்துவமனையில் தற்பொழுது கரோனா தொற்று சிகிச்சை மையமும் அமைந்துள்ளது.

மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவா்கள் சிலா் கரோனா தொற்று சிகிச்சை மையத்தில் பணியாற்றி வருகின்றனா். இதன் காரணமாக இம்மருத்துவமனையில் பகல் நேரத்தில் ஒரு மருத்துவா் மட்டுமே நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிப்பதாகவும், இரவு நேரத்தில் செவிலியா்கள் கிசிச்சை அளிப்பதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும் இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்கும் செவிலியா்கள் நோயாளிகளை சென்னை செல்லும் பரிந்துரை செய்து அனுப்புவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இப்பகுதியில் தனியாா் மருத்துமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவா் இல்லை. இதன் காரணமாக பொன்னேரி பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே கரோனா தொற்று அச்சுறுத்தல், உள்ள இந்த சூழ்நிலையில் பொன்னேரி அரசு மருத்துவமனையில் 24மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருந்து, சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT