திருவள்ளூர்

பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நீர்

21st Sep 2020 02:08 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் திங்கள்கிழமை அதிகாலையில் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. தற்போதைய நிலையில் 100 கன அடிநீர் வருவதாகவும் அடுத்து வரும் 24-மணிநேரத்தில் படிப்படியாக நீரின் வரத்து அதிகரிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மக்களின் தாகம் தணிக்கும் ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டுத் திட்டப்படி, ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தம். அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்குத் திறக்க வேண்டும். இதற்கிடையே போதிய மழையின்றியும், கிருஷ்ணா நீர்வரத்து இன்றியும் பூண்டி ஏரி வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கிருஷ்ணா நீர் பங்கீட்டுத் திட்டப்படி, தண்ணீர் திறக்க வேண்டி தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து கண்டலேறு அணையில் இருந்து கண்டலேறு அணையில் இருந்து கடந்த 18-ஆம் தேதி காலை 9 மணிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் 150 கி.மீ. தூரம் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் பகுதியை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தது.

பின்னர் அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு திங்கள்கிழமை அதிகாலை 6.20 மணிக்கு வந்தடைந்தது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில், பூண்டி ஏரியில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 109 மில்லியன் கனஅடி நீர் இருப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அதிகாலையில் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இதில் தொடக்கமாக 100 கனஅடி நீர் மட்டும் வரும், அடுத்து வரும் 24 மணிநேரத்திற்குள் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

இதனால் பூண்டி ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக உயருவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Tags : Tiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT