திருவள்ளூர்

கரோனா தடுப்புப் பணிகள்: திருவள்ளூரில் சுகாதாரத் துறை செயலர் ஆய்வு

21st Sep 2020 01:49 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து பேருந்து நிலையம், பஜார் பகுதியில் திங்கள்கிழமை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கட்டாயம் அணியவும் வலியுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரவாமல் தடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் நோய் தொற்றை தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் அணியவும் வலியுறுத்தி அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் கரோனா பரவல் என்பது குறைந்துகொண்ட வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து நகராட்சி பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த ஒவ்வொரு பேருந்துகளிலும் ஏறி முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கினார். அதைத் தொடர்ந்து அப்பேருந்தில் இருந்த நடத்துனரிடம் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்தில் ஏற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து அப்பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த கடைகளுக்கு சென்று கரோனா தடுப்பு கிருமி நாசினிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். பின்னர் அங்கிருந்து தேரடி வீதி மற்றும் பஜார் பகுதியில் உள்ள ஜவுளி கடைகள், நகைகடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு நேரில் சென்று, முகக்கவசம் அணிவதன் மூலமே கரோனா நோய் தொற்றை தடுக்க முடியும். 

தற்போது, இதுபோன்ற நடவடிக்கையால் கரோனா நோய் தொற்று இம்மாவட்டத்தில் பரவுவது குறைந்துகொண்டே வருவதாகவும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு பிரிவுக்கு சென்றார். அங்கு சென்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அரசி மற்றும் அதிகாரிகளிடம் நாள்தோறும் பாதிப்பு மற்றும் சிகிச்சை பெற்று வெளியே செல்வோர் குறித்து விவரமாக கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றார்.

ADVERTISEMENT

அப்போது, உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊரக நலப்பணிகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராணி, துணை இயக்குநர் ஜஹகர்லால், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சேகர், வட்டாட்சியர் விஜயகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

Tags : Tiruvallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT