திருவள்ளூர்

காஞ்சிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான காய்கறி சந்தை மீண்டும் திறப்பு

21st Sep 2020 10:18 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான காய்கறி சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. காய்கறி சந்தை திறப்பால் வியாபாரிகள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம். 

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ராஜாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. மிகப் பழமையான இக் காய்கறி சந்தை கரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மழைக்காலமாக இருந்ததால் சேறும் சகதியுமாக காய்கறி வியாபாரம் பெருமளவு பாதித்தது. இதனைத் தொடர்ந்து காய்கறி சந்தையானது. காஞ்சிபுரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நசரத்பேட்டை அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால் பொதுமக்களும் காய்கறி வாங்க செல்லவில்லை. காய்கறி விற்பனையும் பாதித்தது. 

இதனால் காய்கறி வியாபாரிகள் பழமையான காய்கறி சந்தையை மீண்டும் அதே இடத்தில் செயல்பட அனுமதிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், அண்ணா திமுக மாவட்ட செயலாளர் வீ. சோமசுந்தரமும் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திங்கட்கிழமை முதல் ராஜாஜி காய்கறி சந்தை பழைய இடத்திலேயே செயல்படலாம் என அனுமதி வழங்கினார். இதனால் காய்கறி சந்தை திங்கட்கிழமை முதல் மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட தொடங்கியது காய்கறி சந்தையை அண்ணா திமுக மாவட்ட செயலாளர் வீ. சோமசுந்தரம் திறந்து வைத்தார். 

காய்கறிச் சந்தை திறப்பால்  வியாபாரிகள் பட்டாசு வெடித்தும், மங்கள நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி நடத்தியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். சங்க வளாகத்தில் உள்ள  தண்டுமாரியம்மன் கோவில் மூலவர்  திறப்பு விழாவை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சந்தையில் உள்ள காய்கறி கடைகளில் அண்ணா திமுக மாவட்ட செயலாளர் வீ. சோமசுந்தரம் காய்கறி விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் பாசறையின் துணை தலைவர் திலக்குமார் உள்பட அண்ணா திமுக நிர்வாகிகள், காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் வியாபாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

திறப்பு விழா குறித்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மோகன் கூறுகையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக காய்கறி வியாபாரிகள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தோம். வையாவூரில்  மழையின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நசரத்பேட்டை காய்கறி சந்தை தொடங்கியபோது காய்கறி வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மார்க்கெட் தொலைவில் இருந்ததால் பொது மக்களும் யாரும் காய்கறி வாங்க வரவில்லை. காய்கறி விற்பனை வெகுவாக பாதித்தது. இப்போது மீண்டும் காய்கறி சந்தை திறப்பால் காய்கறி வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உதாரணத்திற்கு ஒரு வியாபாரிக்கு நசரத்பேட்டையில் ஒரு நாளைக்கு 5மூடை காய்கறி தான் விற்கும் என்றால் ராஜாஜி காய்கறிச் சந்தையில் 50 மூடை காய்கறிகள் வரை விற்கும். 

ராஜாஜி காய்கறிச் சந்தையில்  காய்கறி விற்பனை அதிகமாக நடக்கும்.இதனால் சந்தையில் உள்ள சுமார் 400 வியாபாரிகள் பலன் பெறுவார்கள். பொதுமக்களும் சிறு வியாபாரிகளும் அதிக அளவில் வந்து காய்கறிகளை வாங்குவதால் காய்கறி வியாபாரிகள் மத்தியில் ஒரு உற்சாகம் கிளம்பி இருக்கிறது. இதன் காரணமாகத்தான் பட்டாசு வெடித்தும் மங்கள நாதஸ்வரக் கச்சேரிகள் நடத்தியும் எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறோம். காய்கறி வியாபாரிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இது  பொதுமக்களுக்கும் சிறுவியாபாரிகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கும். இதற்காக ஆட்சியர் பா.பொன்னையா, அதிமுக மாவட்ட செயலாளர் வீ.சோமசுந்தரம், நகராட்சி ஆணையாளர் ரா.மகேசுவரி ஆகியோருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தலைவர் மோகன் தெரிவித்தார்.


 

Tags : Kanchipuram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT