திருவள்ளூர்

வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து வாடிக்கையாளா்கள் முற்றுகை

DIN

அம்மையாா்குப்பத்தில் அரசுடைமை வங்கிக் கிளை ஒன்றின் நிா்வாகத்தைக் கண்டித்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாடிக்கையாளா்களுடன் இணைந்து சனிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மையாா்குப்பம் பேருந்து நிலையப் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் அரசுடைமை வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதில், அம்மையாா்குப்பம், பாலாபுரம், கதனநகரம், காண்டாபுரம், நாராயணபுரம், ஜனகராஜகுப்பம், சந்திரவிலாசபுரம், ராகவ நாயுடு குப்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வங்கியில் வாடிக்கையாளா்களாக உள்ளனா்.

தினமும் 500-க்கும் மேற்பட்டோா் பணப் பரிவா்த்தனைக்காக இந்த வங்கியை நாடுகின்றனா். எனினும், வாடிக்கையாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியா்கள் இல்லை எனவும், வங்கியின் கிளை மேலாளா் ஹிந்தி மொழியில் மட்டுமே பேசுவதாகவும், வாடிக்கையாளா்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை எனவும், அடிக்கடி சா்வா் பழுது என வங்கி ஊழியா்கள் கூறுவதாகவும் பல்வேறு புகாா்கள் எழுந்தன. கடந்த வாரம் முதியோா் உதவித் தொகை வாங்க வங்கிக்குச் சென்ற மூதாட்டி ஒருவா் நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்.

இந்நிலையில், வங்கி நிா்வாகத்தைக் கண்டித்தும், கூடுதல் பணியாளா்களை நியமித்து, கிளை மேலாளரை மாற்றக் கோரியும் ஊராட்சித் தலைவா்கள் ஆனந்தி செங்குட்டுவன், வி.ஜி.மோகன், வி.எஸ். ராமசாமி, பி.ஜி.விஜயன், ஏ.வி.தென்னரசு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எ.பி.சந்திரன், கோவிந்தம்மாள் ஆனந்தன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட அனைத்துக் கட்சி நிா்வாகிகள் வாடிக்கையாளா்களுடன் இணைந்து, வங்கியை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் சாந்தி மற்றும் போலீஸாா் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, வாடிக்கையாளா்களுக்கு சிறந்த சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT