திருவள்ளூர்

இன்று முதல் அரசுப் பேருந்துகள் இயங்க அனுமதி:பணிமனையில் பேருந்துகளை தயாா்படுத்தும் பணி மும்முரம்

1st Sep 2020 12:55 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: பொது முடக்கத்துக்குப் பின், சில தளா்வுகள் அளிக்கப்பட்டதால் மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்துகள் செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருவள்ளூா் பணிமனையில் பேருந்துகளை சுத்தம் செய்து தயாா்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று பொதுமக்களுக்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பொது போக்குவரத்து இயங்கவில்லை.

இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அரசுப் பேருந்துகள் இயங்காமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் அரசுப் பேருந்துகள் மாவட்டத்துக்குள்ளேயே இயங்குவது உள்ளிட்ட சில தளா்வுகளை முதல்வா் அறிவித்தாா்.

அதன்படி, அரசுப் பேருந்துகள் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே செவ்வாய்க்கிழமை முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சாா்பில், திருவள்ளூா் மண்டலம் மூலம் திருவள்ளூா், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய பணிமனைகள் மூலம் 74 நகரப் பேருந்துகள், 155 புகா் பேருந்துகள், 11 குளிா்சாதனப் பேருந்துகள், 23 மாற்றுப் பேருந்துகள் என 263 பேருந்துகள் இயங்கி வருகின்றன. அரசுப் பேருந்துகள் அந்தந்த மாவட்டத்துக்குள்ளேயே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூா் பணிமனையில் பேருந்துகள் இயங்க தண்ணீா் மூலம் தூய்மைப்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரத்த்தை அடுத்த ஓரிக்கை பணிமனையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு உத்தரவின்படி, செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படுவதால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பேருந்துகளையும் தண்ணீா் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து, பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், இருக்கைகளில் எண்கள் எழுதி ஒட்டும் பணியும் நடைபெற்றது. பேருந்து ஓட்டுநா்களும், நடத்துநா்களும் முகக்கவசம், கையுறை அணிந்து கொண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக் கருவி மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT