பெரியபாளையம் அருகே ஆரணியாற்றை கடக்க முயன்று வெள்ளத்தில் சிக்கிய நபரை தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான தேவன் என்பவர் மங்களம் கிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஆரணிக்கு திரும்பினார்.
ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கிய நிலையில் ஆற்றை கடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர்.
கரைக்கு அவரை மீட்டு வர முடியாததால் அங்கிருந்த மரத்தின் கிளையை பிடித்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி வெள்ளத்தில் சிக்கி தவித்த தேவனை பத்திரமாக மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய நபரை துணிச்சலுடன் சென்று மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.