திருவள்ளூர்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்தடைந்த கிருஷ்ணா நீர் 

29th May 2020 06:32 PM

ADVERTISEMENT

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வெள்ளிக்கிழமை காலையில் வந்து சேர்ந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

சென்னை பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்குவது பூண்டி ஏரியாகும். இந்த ஏரிக்கு ஒவ்வொரு ஆண்டுதோறும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி அந்திர அரசு 12 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு இருதவணைகளாக வழங்க வேண்டும் என்பதே ஒப்பந்தமாகும். அதன் அடிப்படையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், ஜூலை முதல் அக்டோபர் வரையில் 8 டி.எம்.சி தண்ணீரும் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறக்க வேண்டும்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் அனைகளுக்கு நீர் வரத்தும் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டியை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழகத்திற்கு குடிதண்ணீர் திறந்துவிடும் படியும் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் ஸ்ரீசைலம் அணையிலிருந்து சோமசீலா வழியாக கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் 68 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட கண்டலேறு அணையில், தற்போது 13 டி.எம்.சி இருப்பு இருந்தது. எனவே இந்த அணையில் 8 டி.எம்.சிக்கு மேல் தண்ணீர் இருந்த காரணத்தால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் அடிப்படையில் பூண்டி ஏரிக்கு 7.556 டி.எம்.சி தண்ணீர் வரையில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரை டி.எம்.சி தண்ணீர் வழங்குவதற்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் கடந்த 25-ஆம் தேதி திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த கிருஷ்ணா நீர் 175 கி.மீ கடந்து, ஆந்திர-தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டுக்கு வியாழக்கிழமை 9 மணிக்கு 135 கன அடி நீர் வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு கிருஷ்ணா நீர் வரத்து வந்தடைந்தது. அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிருஷ்ணா கால்வாயில் வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

இந்த நிலையில் ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் வரையில் சேமித்து வைக்க முடியும். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நீர்மட்டம் 395 மில்லியன் கன அடி வரையில் இருப்பு உள்ளது. தற்போது, 60 கனஅடி வரையில் நீர் வந்து கொண்டுள்ளது. எனவே அடுத்து வரும் நாள்களில் நீர் வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இங்கிருந்து புழல் ஏரிக்கு 300 கன அடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்து வரும் நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. இதுபோன்ற காரணங்களால் நிகழாண்டில் சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT