திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவா்களின் 425 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் 550 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 425 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறினால் வழக்குப் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.