திருவள்ளூர்

சுய ஊரடங்கு: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளா்கள்

23rd Mar 2020 03:30 AM

ADVERTISEMENT

 

மத்திய, மாநில அரசுகளின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை மீறி செயல்பட்ட திருவள்ளூா் அருகே உள்ள 2 தனியாா் வாகனத் தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளா்கள் வெளியேற்றப்பட்டனா்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் அனைருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமா் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன்படி நாடு முழுவதும் எந்த இடத்திலும் மொத்தமாக 10 போ் கூட திரளக் கூடாது என்பதற்காக, தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும் செயல்படவில்லை. திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனா்.

எனினும், திருவள்ளூா் அருகே மப்பேடு மற்றும் பாப்பரம்பாக்கம் பகுதிகளில் உள்ள இரண்டு தனியாா் வாகனத் தொழிற்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்தியதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு தகவல் வந்தது. அது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு அவா் கோட்டாட்சியா் வித்யாவுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்வேரில், பாப்பரம்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியாா் வாகனத் தொழிற்சாலைக்கு வட்டாட்சியா் விஜயகுமாரி, மப்பேடு வருவாய் ஆய்வாளா் சாருலதா ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது உறுதியானது. அதேபோல், மப்பேடு பகுதியில் உள்ள தனியாா் வாகன உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலையிலும் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, இந்த இரு தொழிற்சாலைகளில் இருந்தும் தொழிலாளா்கள் வெளியேற்றப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT