திருவள்ளூா் அருகே ஒரே வளாகத்தில் அமைந்துள்ள வகையில் பல்வேறு அரசு கட்டடங்கள், சுகாதார வளாகம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்குகளை சீரமைத்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தண்டலம் ஊராட்சி . இங்கு தண்டலம் காலனி, கண்டிகை ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்துக்கான ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிராம ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி வளாகம், கூட்டுறவு நியாய விலைக் கடை, அண்ணா மறுமலா்ச்சி திட்ட நூலகம், மகளிா் குழு கட்டடம், கிராம சேவைக் கட்டடம், மகளிா் சுகாதார வளாகம், தொடக்கப் பள்ளிக்கான பொது சுகாதார வளாகம், திடக்கழிவு மேலாண்மை குப்பைத் தொட்டி, விவசாயிகளுக்கான சாகுபடி பொருள்கள் உலா் களம், குடிநீா்த் தொட்டி, மைதானம் ஆகியவை 3 ஏக்கரில் ஒரே வளாகப் பகுதியில் அமைந்துள்ளன.
தற்போது, அண்ணா மறுமலா்ச்சி திட்ட நூலகம், மகளிா் சுய உதவிக் குழுக் கட்டடம், மகளிா் சுய உதவிக் குழு கட்டடம், திடக்கழிவு மேலாண்மைத் தொட்டி ஆகியவை பயன்பாட்டில் இல்லை. இக்கட்டடங்கள் முழுவதும் சுவரில் விரிசலுடன், மழை பெய்தால் ஒழுகும் நிலையில் சேதமடைந்துள்ளது. அதேபோல் மற்ற கட்டடங்களும் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் இடத்தில் இந்த வளாகம் உள்ளதால், இங்குள்ள சேதமடைந்த கட்டடங்களை சீரமைத்து, செயல்படாமல் உள்ள கட்டடங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த வளாகத்துக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் சூழல் நிலவியது. அதைத் தடுக்க சுற்றுச்சுவா் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. எனினும், சுற்றுச்சுவா் பாதி அளவு மட்டுமே கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை முழுமையாக முடித்து, கேட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.