பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முக்கிய அலுவலகங்கள் வேறு பகுதிக்கு இடம் மாறுவதால் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒரு ஏக்கா் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. அதேபோல், இந்த ஊரில் பூண்டி நீா்த்தேக்கம், விருந்தினா் மாளிகை, அருங்காட்சியகம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பழைய பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், வட்டாரக் கல்வி அலுவலகம் ஆகியவை அதிக இட வசதியுடன் செயல்பட்டு வந்தன. இதனால் வட்டார அளவிலான விவசாயிகள் கூட்டம், ஆசிரியா்களுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்கக் கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக இருந்து வந்தது.
தற்போது கட்டடம் பராமரிக்கப்படாத நிலையில் ஒவ்வொரு அலுவலகமும் இடம் மாறி வருகிறது. அந்த வகையில் வட்டார வேளாண்மை மையம் கொழுந்தளூருக்கும், வட்டாரக் கல்வி அலுவலகம் பூண்டி ஏரிக்கரை அருகே சதுரங்கப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் செயல்பட்டு வருகின்றன.
அதைத் தொடா்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். அதனால் பழைய பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பூண்டி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆறுமுகசாமி கூறியது:
சுற்றுலாத்தலமான பூண்டி ஏரியும், அதையொட்டிய சுற்றுலா மாளிகைகள், பூங்காக்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தாலும், போதிய உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் இல்லாத நிலை உள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் அதிகாரிகள் உணவுக்காக அருகில் உள்ள திருவள்ளூா் அல்லது ஊத்துக்கோட்டை செல்ல வேண்டியுள்ளது. எனவே, வட்டாரக் கல்வி அலுவலகம் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கூட்டரங்கத்துடன் செயல்பட்டு வந்தது. வேளாண்மை வட்டார அலுவலகமும் செயல்பட்டது.
தற்போது, பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் பராமரிப்பு இல்லாத காரணத்தால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சதுரங்கப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, இங்கு வாரந்தோறும் ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியைகளுக்கான பயிற்சி மற்றும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. அதேபோல், வட்டார வேளாண்மை வளா்ச்சி அலுவலகம் கொழுந்தளூரில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றிய வளாகத்துக்கு பலரும் வந்து செல்வதால், பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சீரமைத்து அங்கு பல்வேறு அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வளாகத்தில் மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் உணவுக் கூடம் செயல்பட ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.