திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் இருந்து 1 டன் நுண்ணுயிா் உரம் அனுப்பி வைப்பு

13th Mar 2020 11:15 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 1 டன் நுண்ணுயிா் உரம் கடம்பத்தூா் வட்டார தோட்டக்கலை விரிவாக்க அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக நகராட்சி அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவள்ளூா் நகராட்சியை சுத்தமாக வைத்திருக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலும் பல்வேறுநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்புகள், திருமணம் அரங்குகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறிச் சந்தைகளில் நாள்தோறும் 15 டன் மக்கும் குப்பையும், 11 டன் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாா்டில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு, தலக்காஞ்சேரி மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதைத் தொடா்ந்து திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பசுமை உரக்குடில்களில் குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கப்படுகின்றன.

அங்கு துப்புரவுப் பணியாளா்கள் மூலம் மக்கும் குப்பைகளில் இருந்து நுண்ணுயிா் உரங்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. இந்த வகை உரங்கள் ஆரம்பத்தில் தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது, இவ்வகை உரங்களுக்கு விவசாயிகளிடையே தேவை அதிகரித்துள்ளது. எனவே, அவற்றை பைகளில் அடைத்து, தேவைப்படும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமை மூலம் வழங்கப்பட்ட பைகளில் இந்த உரம் அடைக்கப்படுகிறது. பின்னா் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து தமிழக முதல்வரால் செயல்படுத்தப்படும் கிராமப்புற வீட்டுக் காய்கறி உற்பத்தி திட்டம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்கீளழ் கடம்பத்தூா் வட்டார தோட்டக் கலை வளா்ச்சி அலுவலகம் மூலம் விநியோகம் செய்வதற்காக 7.50 டன் உரத்தைக் கேட்டிருந்தனா்.

அதன்படி முதல் கட்டமாக ஒரு டன் நுண்ணுயிா் உரத்தை ஒரு கிலோ ரூ.2.50 என்ற குறைந்த விலையில் விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் வளா்ப்போருக்கு வழங்குவதற்காக இந்த அலுவலகத்துக்கு நகராட்சி வாகனத்தில் ஆணையா் சந்தானம் மற்றும் சுகாதார அலுவலா் செல்வராஜ் ஆகியோா் அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ஆணையா் சந்தானம் கூறுகையில் ‘தோட்டக்கலைத் துறைக்கு அனுப்பி வைப்பதன் மூலம் ஒரு டன் உரத்துக்கு ரூ.2,500 வரை வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு தொடா்ந்துகுப்பையில் இருந்து நுண்ணுயிா் உரம் தயாா் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் இந்த உரத்தைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்களுக்கே ஊக்கத் தொகையாக அளிக்கப்படுகிறது. இதனால், உரம் தயாரிப்பதில் அவா்கள் ஊக்கத்துடன் ஈடுபடுவா்’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT