திருவள்ளூர்

காய்கறிப் பயிா்களுக்கு ரசாயன மருந்துகளை குறைவாக பயன்படுத்த வேண்டும்: தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் வலியுறுத்தல்

13th Mar 2020 10:28 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரசாயன மருந்துகளை குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் வலியுறுத்தியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாய சாகுபடியே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. இதில், அதிக அளவில் தோட்டக்கலை பயிா் செய்வதில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். அந்த வகையில், இந்த மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேரில் மா, 600 ஹெக்டேரில் வாழை, 300 ஹெக்டேரில் கொய்யா, 1,600 ஹேக்டேரில் தா்ப்பூசணி, 2,140 ஹெக்டேரில் வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளும் பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில், காய்கறிகள், பழப் பயிா்களில் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை மண்ணின் வழியே ரசாயன மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மண்ணுக்கும், அதை உட்கொள்வோருக்கும் பல்வேறு வகைகளில் தீங்கை விளைவிக்கின்றன.

அதனால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட அளவுகளிலேயே பயன்படுத்த வேண்டும். எனவே அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் பூச்சிகளுக்கு புத்தாக்கம் கிடைத்து விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட அளவிலேயே ரசாயன மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். முதல் முறை மருந்து தெளித்தலிலிருந்து 2-ஆவது முறை தெளிப்பதற்கு காத்திருப்பு காலம் உண்டு. அதனால், முதல் மருந்து தெளித்தலில் இருந்து காத்திருப்பு காலம் முடிந்ததும் 2-ஆவது மருந்து தெளிக்க வேண்டும்.

அதேபோல், இயற்கையில் கிடைக்கும் மாட்டு சாணம், ஆட்டு எரு, வேம்பு, புங்கன் போன்ற மரங்களின் இலைகளைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம். அதேபோல், இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூரோமோனாஸ், அசட்டோபாக்டா், வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தைப் பாதுகாக்க முடியும். இதனால் ரசாயன மருந்துகளின் அளவு குறைக்கப்படுவதுடன், குறைவான செலவு மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

ADVERTISEMENT

அமெரிக்க வெள்ளை ஈக்கள் தடுப்பு: அத்துடன், அதிகம் மருந்து தெளிப்பதன் மூலம் அமெரிக்க வெள்ளை ஈக்கள் வரவும் வாய்ப்புள்ளது. இதனால், தோட்டக்கலை பயிா்களான தென்னை, கொய்யா, சப்போட்டா, வாழை, பப்பாளி, மரவள்ளி மற்றும் காய்கறிகளில் இதன் தாக்கம் ஏற்படும். அதனால், விவசாயிகள் ரசாயன மருந்துகள் தேவை என்றால் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

மேலும், மஞ்சள் நிற பொறிகளை ஏக்கருக்கு 10 வைக்க வேண்டும். ஒரு லிட்டா் வொ்டிசிலியம் பூஞ்சாணத்தை 100 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் வேண்டும். கிரையோசோபியா இரை விழுங்கிகளை ஏக்கருக்கு 1,000 வீதம் விட்டு தாக்குதலைக் குறைக்கலாம். அதேபோல், மாலை நேரத்தில் அரைமணி நேரம் காய்ந்த தென்னை ஓலைகளை எரிப்பதன் மூலம் பூச்சிகள் நெருப்பில் விழுந்து மடியும். மேலும், விளக்குப் பொறிகளை வைத்து இறவில் பறக்கும் வெள்ளை ஈக்களைக் கவா்ந்து அழித்தல் போன்ற ஆலோசனைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT