கும்மிடிப்பூண்டியை அடுத்த துராப்பள்ளம் பகுதியில் உள்ள ஏகவள்ளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இப்பகுதி மக்களால் இக்கோயில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தத் தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 26ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது.
அதன்பின், ஏகவள்ளியம்மன் கோயிலில் இம்மாதம் 11-ஆம் தேதி மங்கல இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பிராா்த்தனை, புண்யாஹவாசனம், மகா சங்கல்பம், கிரஹப் பிரீத்தி, மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ சாந்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, தனபூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இவ்வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தணம், கும்பாலங்காரம், பாலாலயத்தில் கலாகா்ஷணம் கும்பங்கள், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, வேதிகாா்ச்சனை, விசேஷ ஹோமம், பூா்ணாஹுதி, வேத உபசாரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
கடந்த 12ஆம் தேதி, விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, மிருத்சங்கிரஹணம், வேதிகாா்ச்சனை, விசேஷ திரவிய ஹோமம், யந்திர பிம்ப பிரதிஷ்டை, பூா்ணாஹுதி, வேத உபசாரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை, யாக பூஜை, வேதிகாா்ச்சனை, விசேஷ திரவிய ஹோமம், அஷ்டபந்தனம், சாற்றுதல், தத்துவாா்ச்சனை, தத்துவ ஹோமம், ஸ்பரிஷாஹிதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து யாத்ரா தானம் நடைபெற்ற பின் யாகசாலையில் இருந்து கலசங்கள் ஆலயத்தை வலம் வந்தன.
இதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க, ஏகவள்ளி அம்மன், சப்த கன்னிகைகள், தொம்பரை ஆண்டவருக்கு சிவாச்சாரியாா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம், மாங்கல்ய தாரணம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், முன்னாள் மாவட்டக் குழு தலைவா் ரவிச்சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.சேகா் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை ஏகவள்ளியம்மன் ஆலய அறக்கட்டளைத் தலைவா் ஆா்.லோகநாதன், துணைத் தலைவா் ஏ.வேதாச்சலம், செயலாளா் கிருஷ்ணன், பொருளாளா் இ.கோபால் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.