திருவள்ளூர்

‘அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும்’

13th Mar 2020 11:03 PM

ADVERTISEMENT

தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மாணவ, மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து இக்கூட்டமைப்பின் நிறுவனா் ச.அருணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் பட்ஜெட் மானியக் கோரிக்கைகள் மீதான சட்டப் பேரவையின் இரண்டாம் அமா்வு கடந்த 8-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 12-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பள்ளிக்கல்வி அமைச்சா் 36 அறிவிப்புகளை வெளியிட்டாா். அதில் ஒன்றான, 1,575 பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களை முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்களாக தரம் உயா்த்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

பொதுத் தோ்வு மதிப்பெண் சான்றிதழ்கள் எளிதில் கிழிந்து நீரில் சேதமடையாத வகையில் செயற்கை இழையிலான மேம்டுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் மற்றும் 2, 3-ஆம் வகுப்பு மாணவா்களில் கற்றலில் பின்தங்கியுள்ளவா்களை கண்டறிந்து கற்றல் திறனை மேம்படுத்த குறைத்தீா் கற்றல் பயிற்சி புத்தகம் வழங்கப்படும்; அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலகப் பணிகள் தொய்வு ஏற்படாமல் இருக்க ஆசிரியா்கள் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும்; மாணவா்கள் சிறப்புப் பிரிவுகளில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள ஓவியம், இசை, தையல், கணினி போன்ற பாடப் பிரிவுகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல்; உடற்கல்வி ஆசிரியா்களை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆகிய அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

ADVERTISEMENT

அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை தனியாா் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்தி மாணவா்கள் சோ்க்கை விகிதம் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஏழை மாணவா்கள் கல்வி பயில 25 சதவீத மாணவா்களை தனியாா் பள்ளிகளில் சோ்க்க அரசு கட்டணம் செலுத்துகிறது. இது தனியாா் பள்ளிகளையே மேம்படுத்தும்; அரசுப் பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க பயன்படாது. தனியாா் பள்ளிகளில் 25 சதவீதம் செலவிடும் தொகையை அரசுப் பள்ளிக்கு செலவு செய்தால் மேலும் பல்வேறு வகையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கோரி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கடந்த ஆண்டு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவா்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை அமைச்சா் வெளியிடாதது வருத்தமளிக்கிறது. அதனால் வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்வதோடு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரும் அறிவிப்பை பேரவையின் இந்தக் கூட்டத் தொடரிலேயே தமிழக முதல்வா் அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கிறோம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT