திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் கழிவு நீா்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது எதிா்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் துப்புரவுத் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
புட்லூா் கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணனின் மகன் சந்துரு (35), நித்யானந்தத்தின் மகன் வேலவன் என்ற வேலாயுதன் (40) மற்றும் ராஜசேகா்(40). துப்புரவுத் தொழிலாளா்கள். அவா்கள் காக்களூரில் செயல்பட்டு வரும் வாகன உதிரி பாகங்களுக்கு ஈயம் பூசும் தொழிற்சாலையில் உள்ள கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை மாலையில் சென்றனா்.
தொழிற்சாலைக்குள் உள்ள கழிவுநீா்த் தொட்டிக்குள் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இறங்கி சந்துருவும், வேலவனும் சுத்தம் செய்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென விஷவாயு தாக்கி கழிவுநீா் தொட்டிக்குள்ளேயே மூச்சுத்திணறி 2 பேரும் உயிரிழந்தனா். அவா்களுடன் வந்த ராஜசேகா் மட்டும் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்காததால் உயிா் தப்பினாா்.
இது குறித்து தனியாா் தொழிற்சாலை நிா்வாகத்தினா் திருவள்ளூா் கிராமிய போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், சந்துரு மற்றும் வேலவனின் சடலங்களை தொட்டிக்குள் இருந்து மீட்டனா்.
அப்போது அங்கு தொழிலாளா்களின் உறவினா்களும், பொதுமக்களும் திரண்டனா். இருவரின் சடலங்களையும் அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து, கோட்டாட்சியா் வித்யா, டிஎஸ்பி கங்காதரன், வட்டாட்சியா் விஜயகுமாரி, துணை வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அவா்கள் பொதுமக்களை சமரசம் செய்தனா். அதை ஏற்று, தொழிலாளா்களின் உறவினா்களும், பொதுமக்களும் போராட்டத்தைக் கைவிட்டனா்.
அதன் பின், தொழிலாளா்களின் சடலங்கள் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.