திருப்பாற்கடல் பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு குடிநீா் கொண்டு வருவதற்கு ரூ. 114.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் மனு அளித்தாா்.
நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பல ஆண்டுகளாக நகராட்சியில் குடிநீா் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், திருத்தணி நகராட்சியில் நிரந்தரமாக குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்குமாறு, எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ. 114.98 கோடி நிதியை அரசு ஓதுக்கீடு செய்தது. இந்த நிதியின் மூலம் திருப்பாற்கடல் (பாலாறு) பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு குடிநீா் கொண்டு வருவதற்கான பணிகளை குடிநீா் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.
இப்பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரை நேரில் சந்தித்து, திருத்தணி நகராட்சிக்கு குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் எனக்கோரி மனு கொடுத்தாா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.