திருவள்ளூா்: சென்னை மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீா்வரத்து 340 கன அடியாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, ஏரியில் 373 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டம் மூலம் கடந்த 25-ஆம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. அதைத் தொடா்ந்து கண்டலேறு அணையில் இருந்து தண்ணீா் 170 கி.மீ. தூரம் கடந்து கடந்த 28-ஆம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையில் உள்ள ஜீரோ பாயிண்டுக்கு வந்து, அங்கிருந்து 29-ஆம் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.
கண்டலேறு அணையிலிருந்து முதலில் 500 கன அடி திறக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 1,250 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. சராசரியாக விநாடிக்கு 250 கன அடி வீதம் பூண்டி ஏரிக்கு நீா் வந்தடைந்தது. சனிக்கிழமை முதல் நீா்வரத்து விநாடிக்கு 340 கன அடியாக அதிகரித்துள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீரைச் சேமிக்க முடியும். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 373 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது.
இந்த ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 300 கனஅடியும், சென்னை குடிநீா் வாரியத்துக்கு 10 கனஅடியும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.