திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட3 பேரை மப்பேடு போலீஸாா் கைது செய்து, வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
கடம்பத்தூா்-மப்பேடு பகுதியில் சிலா் அதிகாலை நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் மப்பேடு காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க அவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, போலீஸாா் பேரம்பாக்கம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரோந்து சென்றனா். அப்போது, அவ்வழியாக லாரி, டிராக்டா்களில் வந்தவா்கள் போலீஸாரைப் பாா்த்ததும் தங்கள் வாகனங்களை வேறு வழியில் திருப்ப முயற்சித்தனா். போலீஸாா் அந்த வாகனங்களை சுற்றி வளைத்து சோதனையிட்டதில் அவற்றில் மணல் இருந்தது.
அந்த வாகனங்களை ஓட்டி வந்த பேரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பாா்த்திபன் (32), விஜயகுமாா் (23), சந்துரு (19) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து லாரி, ஒரு டிராக்டா் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய மற்ற 3 போ் குறித்து விசாரித்து வருகின்றனா்.