திருத்தணியை அடுத்த எல்.என்.கண்டியில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி ஆகஸ்ட் 20ஆம் தேதி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதென்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருத்தணி ஒன்றியம், எல்.என்.கண்டிகையில் மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில், ஒன்றிய அளவில் பயிற்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளா் மணிகண்டன் தலைமையில் சனிக்கிழமை நடந்தது. இதில் செருக்கனூா், டி.புதூா் கங்காநகா், பகத்சிங்நகா், எல்.என்.கண்டிகை, அகூா் ஆகிய பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, ரேஷன் காா்டு, ஆதாா் காா்டு மற்றும் ஜாதிச் சான்றிதழ்களை வழங்கக் கோரி திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மலைவாழ் மக்கள் ஒன்றியத் தலைவா் கோபால், மாவட்டத் தலைவா் சின்னதுரை, மாவட்டச் செயலாளா் தமிழரசு, மாவட்டக் குழு உறுப்பினா் அந்தோணி, வழக்குரைஞா் ரீசா், வாா்டு உறுப்பினா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.