திருவள்ளூா் நகராட்சியில் ஜே.என்.சாலை, வி.எம்.நகா் மற்றும் பூங்கா நகா் பகுதிகளில் உள்ள 13 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நகரின் ஜே.என்.சாலையில் உள்ள மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம், குளிா்பானக் கடையில் ரூ.3 ஆயிரம் மற்றும் பேக்கரி கடையில் ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திருடிச் சென்றனா். அதேபோல், வி.எம்.நகரில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நாணயம் மற்றும் ரூ.2 ஆயிரத்தையும், பல்பொருள்கள் அங்காடியில் ரூ.2 ஆயிரத்தையும் திருடிச் சென்றனா்.
இதனிடையே, பூங்கா நகரில் உள்ள மளிகைக் கடை, இணைய மையம், பேக்கரி ஆகிய 7 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் கடைக்காரா்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.