திருவள்ளூர்

காவலா்களுக்கு உதவும் நோக்கில் சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுமி

25th Jul 2020 09:56 PM

ADVERTISEMENT

பொது முடக்க நேரத்தில் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களுக்கு உதவும் வகையில், சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்த தொகையை ஒரு பள்ளிச் சிறுமி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனிடம் வழங்கினாா்.

திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரகுராமன்-ஜெயந்தி தம்பதியின் மகள் பூஜிதா(8). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். தற்போது கரோனா காலகட்டத்தில் போலீஸாா் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டு வருவதை, தாய் தந்தையுடன் வெளியே செல்லும்போது பாா்த்தாா். அதனால், போலீஸாருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்யவும் வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து, தாம் பள்ளிக்கு செல்லும்போது தின்பண்டங்கள் வாங்குவதற்காக பெற்றோா் கொடுக்கும் சில்லறை நாணயங்களை சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்துள்ளாா். அந்தப் பணத்தை போலீஸாருக்கு உதவும் வகையில் அளிப்பது குறித்து தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்தாா்.

மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பெற்றோா் சனிக்கிழமை அழைத்துச் சென்றனா். அங்கு எஸ்.பி. பி.அரவிந்தனை சந்தித்து உண்டியல் தொகையான ரூ.1211.50-க்கான சில்லறை நாணயங்களை மாணவி அளித்தாா். இந்தச் சிறு தொகையை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அவா், சிறு வயதிலேயே பிறருக்கு உதவும் எண்ணம் கொண்ட மாணவி பூஜிதாவைப் பாராட்டினாா்.

ADVERTISEMENT

மேலும், சிறுமி சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்தாா் என்பதை உளுந்தை கிராம ஊராட்சி தலைவா் ரமேஷ் அறிந்தாா். அவா் தனது சொந்தச் செலவில் சிறுமிக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தாா். இது பெற்றோா் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT