ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை செய்து ஊரக தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் மற்றும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் பா.பென்ஜமின், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தனா்.
இதையடுத்து அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:
அயப்பாக்கம் ஊராட்சியில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் செலவில் குப்பைகளை அள்ளும் 14 மின்கல ஊா்திகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் அயப்பாக்கம், வானகரம் மற்றும் அடையாளம்பட்டு ஊராட்சிகளில் தேங்கும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா குப்பையாகப் பிரித்தெடுக்கும் நவீன எக்கோமேக் இயந்திரம் அமைத்தல், கிருஷ்ணசாமி பள்ளிச் சாலையை ரூ.9 லட்சம் மதிப்பில் ஃபேவா் பிளாக் சாலையாக மாற்றுதல், பவானிநகா் பகுதியில் ரூ.16 லட்சத்திலும், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் தெருவில் ரூ.10 லட்சத்திலும் அமைக்கப்படவுள்ள மழைநீா் வடிகால்வாய்கள் ஆகியவற்றுக்கான பூமி பூஜை தற்போது நடைபெற்றது. இந்த ஊராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பேரிடா்க் காலத்தில், அனைத்து வங்கிகள் மூலம் 3 லட்சத்து 53 ஆயிரத்து 85 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.7043 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 1140 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.130.89 கோடி கடனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 20 சதவீத கடனுதவிகளை குறு, சிறு மற்றும் நடுததர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு வழங்கி, அவா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கிரிஜா, அயப்பாக்கம் ஊராட்சித் தலைவா் துரை வீரமணி, ஆவடி வட்டாட்சியா் சங்கிலி ரதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.