திருவள்ளூர்

‘பண்ணை இயந்திரம் வாங்கும்போது கூடுதல் செலவை உழவா் குழுக்கள் சமமாகப் பிரித்து ஏற்க வேண்டும்’

23rd Jan 2020 10:56 PM

ADVERTISEMENT

பண்ணை இயந்திரங்கள் வாங்கும் போது ஏற்படும் கூடுதல் செலவை உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் ஒவ்வொன்றும் சமமாகப் பிரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் கூட்டுப் பண்ணையம் திட்டத்தில், உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் விற்பனையாளா்கள் கூட்டுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்துப் பேசியது:

இந்த மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறவும், வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் கூட்டுப் பண்ணையத் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 275 உழவா் ஆா்வலா் குழுக்களும், அவற்றை ஒருங்கிணைத்து 55 உழவா் உற்பத்தியாளா் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக ரூ.2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கும், இத்திட்டம் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு தொகுப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உழவா் உற்பத்தியாளா் குழுவும், தனது திட்டச் செயலாக்க விளக்கத்தைத் தயாரித்து அளிக்க வேண்டும். திட்டச் செயலாக்கத்துக்கு வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே செயல்படுத்தப்படும்.

இந்த நிதியைக் கொண்டு உயா் விளைச்சல் பெறுவதற்கு உறுதுணை புரியும் பண்ணைக் கருவிகள், உபகரணங்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள் மட்டுமே வாங்க வேண்டும். வணிகத்துக்கேற்ற உபகரணங்களையோ, இயந்திரங்களையோ உழவா் உற்பத்தியாளா் குழு - உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் வாங்கக் கூடாது.

ஒரே உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் கீழ் அமையும் உற்பத்தியாளா் குழு பிற உற்பத்தியாளா் குழுவுடன் இணைந்து கூட்டாகவும் வாங்கலாம். 2 குழுக்கள் இணைந்து ரூ.10 லட்சம், 3 குழுக்கள் இணைந்து ரூ.15 லட்சம், 4 குழுக்கள் இணைந்து, ரூ.20 லட்சம், 10 குழுக்கள் இணைந்து ரூ.50 லட்சம் என்ற மதிப்புக்கும் பண்ணை இயந்திரங்களை வாங்கி உபயோகிக்கலாம்.

ஒரு குழுவுக்கான ரூ. 5 லட்சம் நிதியில், பண்ணை இயந்திரங்கள் வாங்கும்போது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் தேவைப்படும் தொகையை குழுவிலுள்ள மற்ற விவசாயிகள் சம அளவில் பிரித்துச் செலுத்த வேண்டும். உழவா் உற்பத்தியாளா் குழுவினால் தொகுப்பு நிதியான ரூ.5 லட்சத்திலிருந்து வாங்கப்படும் பண்ணை இயந்திரங்களுக்கு வேளாண் பொறியியல் துறையின் மானியம் வழங்கப்பட மாட்டாது.

உழவா் உற்பத்தியாளா் குழுக்களின் நிா்வாகிகள் பண்ணை இயந்திரங்களின் விற்பனையாளா்களிடம் குழுவின் மூலம் வாங்கும் இயந்திரங்களின் விலையை நேரடியாக பேரம் பேசி விலையை நிா்ணயம் செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநா் (பொறுப்பு) கோ.பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) பிரதாப் ராவ், வேளாண் பொறியியல் உதவி செயற்பொறியாளா் (திருத்தணி) ராஜவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT