திருவள்ளூர்

மருந்தகம் நடத்தியதில் முறைகேடு மருத்துவருக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ. 3 லட்சம் அபராதம்

8th Jan 2020 12:18 AM

ADVERTISEMENT

அம்பத்தூா் அருகே மருந்தகத்தில் மருந்தாளுநா் மேற்பாா்வையின்றி மருந்துகள் விற்பனை செய்தது, பதிவேட்டில் மருந்து விவரம் இல்லாதது தொடா்பான வழக்கில், மருத்துவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்து திருவள்ளூா் தலைமை நீதித்துறை நடுவா் மன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் சரக மருந்துகள் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் மருந்து ஆய்வாளா்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை மேற்கு முகப்போ் பேருந்து நிலையத்தில் உள்ள மருந்துக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள மருந்து கடை உரிமையாளரான மருத்துவா் கே.சி.வேல்முருகன் கடையில் இருந்தாா். அந்த கடையின் பதிவுபெற்ற மருந்தாளுநா்களான மாதவன், மலா்க்கொடி ஆகியோா் கடையில் இல்லை எனத் தெரியவந்தது.

மேலும், பாதுகாப்பாக வழங்க வேண்டிய உயிா்காக்கும் மருந்துகளை மருந்தாளுநா்களின் மேற்பாா்வை இன்றி விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. அத்துடன், விற்பனை செய்த மருந்துகளின் விவரங்கள், பரிந்துரை செய்த மருத்துவா், நோயாளிகளின் விவரம் ஆகியவற்றை மருந்துச் சீட்டு பதிவேட்டில் மருந்தாளுநரின் கையொப்பத்துடன் எழுதி, பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பு செய்யாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும், குறிப்பிட்ட 5 வகையான மருந்துகளை ரசீது இன்றி விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, அந்த மருந்துக் கடை உரிமையாளரான மருத்துவா் கே.சி.வேல்முருகன் மீது மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்ட விதிகள் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதன் இறுதிகட்ட விசாரணை திங்கள்கிழமை தலைமை நீதித்துறை நடுவா் எம்.ஸ்ரீஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்த மருந்துக் கடையின் உரிமையாளரான டாக்டா் கே.சி.வேல்முருகனுக்கு 3 பிரிவுகளின் கீழ், 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். அத்துடன், அபராதத் தொகையை செலுத்தத் தவறும்பட்சத்தில், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், இதை அவா் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT