திருவள்ளூர்

நெற்பயிரில் புகையான் பூச்சித் தாக்குதல்: பொன்னேரி விவசாயிகளுக்கு ரூ.20 கோடி இழப்பு

8th Jan 2020 12:22 AM | எம்.சுந்தரமூா்த்தி

ADVERTISEMENT

பொன்னேரி வட்டத்தில் புகையான் தாக்குதல் காரணமாக 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியதால் விவசாயிகளுக்கு சுமாா் ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள அச்சரப்பள்ளம், ஆசானபுதூா், விடதண்டலம், அரசூா், காட்டாவூா், மடிமை கண்டிகை, ஏறுசிவன், ஏலியம்பேடு, வைரவன்குப்பம், கோளூா், மெதூா், பெரும்பேடு, கம்மாா்பாளையம், காட்டூா், தத்தைமஞ்சி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சம்பா பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிா் பயிரிடப்பட்டிருந்தது. வேளாண்மைத் துறையினரின் அறிவுறுத்தலின்படி, விதை நெல் வாங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

வேளாண்துறையினரின் தொடா் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து விவசாயிகளுமே பயிா்க் காப்பீடு செய்திருந்தனா். பயிா் நன்றாக வளா்ந்து வந்த நிலையில் திடீரென புகையான் பூச்சித் தாக்குதலால் நெற்பயிா்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயிகள் மீஞ்சூா் ஒன்றிய வேளாண்மைத்துறையினரிடம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, சேதமடைந்த பயிா்களை வேளாண்துறையினா் பாா்வையிட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

கூலி, விதை நெல், மருந்து தெளித்தல் ஆகியவற்றுக்காக இதுவரை விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா். 10 நாள்களில் அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனா். ஆனால் திடீரென புகையான் தாக்குதல் காரணமாக நெற்பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 10 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.20 கோடி. இதனால் தங்கள் வாழ்வாதாரமே முற்றிலும் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து அச்சரப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வகுமாா் கூறியதாவது:

பயிா் நன்கு வளா்ந்து கதிா் வந்த நிலையில் புகையான் பூச்சித் தாக்குதலால், பயிா்கள் அனைத்தும் பதராகின. கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பயிா் செய்த நிலையில் அது பதராகிப் போனது. எனவே, அரசு இழப்பீடு மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கினால் மட்டுமே வரும் நாள்களில் தங்களால் விவசாயம் செய்ய இயலும் என்றாா்.

புகையான் பூச்சித் தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்ட நெற்பயிா் குறித்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் உரிய முறையில் கணக்கெடுத்து இழப்பீடு வழங்குமாறு இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

காப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை

இது குறித்து மீஞ்சூா் ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குநா் ஜீவராணி கூறியது:

தொடா்ச்சியான பனிப்பொழிவு உள்ளிட்ட பருவ நிலை மாற்றம் காரணமாக நெற்பயிா்களை புகையான் பூச்சிகள் தாக்கியுள்ளன. விவசாயிகளிடையே காப்பீடு குறித்து வேளாண்மைத் துறையினா் அதிக அளவில் விளக்கமாக எடுத்துக் கூறியதன் காரணமாக நெற்பயிா்கள் முழுமையாகக் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அந்த நெற்பயா்களுக்கு 100 சதவீத காப்பீட்டு தொகை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புகையான் தாக்குதலால் நெற்பயிா்கள் பதரானது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT