திருவள்ளூர்

தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி சாலை மறியல்

3rd Jan 2020 11:55 PM

ADVERTISEMENT

திருவள்ளூரில் மாா்க்கெட் பகுதியில் உள்ள மசூதி தெருவில் கழிவு நீா் செல்வதால் துா்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கூறி அப்பகுதியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மசூதி தெருவில் பல்பொருள்கள் அங்காடி, பாத்திரக் கடைகள் மற்றும் நகைக் கடைகள் அதிகம் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். அதோடு, மசூதிக்கு தொழுகைக்காக முஸ்லிம்கள் இவ்வழியாகவே சென்று வருகின்றனா்.

இந்தத் தெரு முழுவதும் கழிவு நீா் தேங்கியுள்ளது. அத்துடன், கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகாா் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் இங்குள்ள மசூதியில் தொழுகையை முடித்து வந்த முஸ்லிம்கள் ‘தெருவில் தேங்கும் கழிவுநீரை அகற்றி சுகாதாரமான பகுதியாக மாற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தி மாா்க்கெட் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் காய்கறிகள் ஏற்றி வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டுநா்ளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து, திருவள்ளூா் நகா் காவல்நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி மற்றும் போலீஸாா் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தெருவில் கழிவு நீா் தேங்குவது தொடா்பாக பல்வேறு முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியினா் தெரிவித்தனா். நகராட்சி மூலம் கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து அப்பகுதியினா் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT