திருவள்ளூர்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் போலீஸாா் சோதனைக்கு பின்னரே அனுப்பி வைப்பு

2nd Jan 2020 03:50 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 மையங்களில் ஊரக உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையில் போலீஸாா் பரிசோதனைக்கு பின்னரே வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 24 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 230 வட்டார ஊராட்சி உறுப்பினா்கள், 526 கிராம ஊராட்சி தலைவா்கள் மற்றும் 3945 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 4725 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தோ்தல் கடந்த 27,30ஆகிய நாள்களில் நடைபெற்றது. இதில் 2577 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை 14 வாக்கு என்னும் மையங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதேபோல், பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் மையம் பாண்டூா் கிராமத்தில் டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதற்காக 4 பதவிகளுக்கும் போட்டியிட்ட வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோா் காலையில் 7 மணிக்கு குவிந்தனா். அதைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோரை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனா். இதில் முதல் கட்டமாக 4 பதவிகளுக்கு பதிவான அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணியினை தோ்தல் அலுவலா்கள் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள இருப்பறையில் இருந்து வாக்குகள் பிரிக்கும் உரிய அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒவ்வொரு பதவிகளுக்கான நிறங்கள் வாரியாக மாவட்ட ஊராட்சி வாா்டு - மஞ்சள், வட்டார ஊராட்சி உறுப்பினா்-பச்சை, ஊராட்சி தலைவருக்கு - இளஞ்சிவப்பு மற்றும் கிராம ஊராட்சி வாா்டுக்கு - வெள்ளை மற்றும் நீளம் என பிரிப்பதற்கு மேஜைகளில் கொட்டி பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதைத் தொடா்ந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டு பெரிய மேஜையில் உள்ள பெட்டியில் கொட்டப்பட்டு பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து ஒவ்வொரு பதவிக்கும் 50 வாக்குகள் கொண்ட கட்டுக்களாக கட்டப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், வட்டார ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான வாக்கு எண்ணும் அறைகளுக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்று எண்ணப்பட்டது.

அதைத் தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு மேல் ஒவ்வொரு ஊராட்சி தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் அறிவிக்க தொடங்கினா். இந்த நிலையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு குறைந்தது 2 மணிநேரம் வரையில் ஆகிறது. இதுபோன்ற காரணங்களால் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரையில் நீடிக்கும் நிலையும் உள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT