திருவள்ளூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 4 பதவிகளுக்கான வாக்குகளும் தனித்தனி மேஜைகளில் எண்ணப்படும்

2nd Jan 2020 04:53 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 4 பதவிகளுக்கு தனித்தனியாகப் பதிவான வாக்குச் சீட்டுக்களை பிரித்து தனித்தனி மேஜைகளில் உள்ள பெட்டிகளில் கொட்டி 50 கட்டுக்களாக கட்டி எண்ணப்பட்டு முடிவுகளை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27, 30 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக, திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும், அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது, வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து மையங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

அதன்படி திருவள்ளூா்-ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி-பெருமாள்பட்டு, கடம்பத்தூா்- செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி-கீழச்சேரி, பூண்டி-டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளி-பாண்டூா், திருவாலங்காடு-அரசு மேல்நிலைப்பள்ளி-ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், ஆா்.கே.பேட்டை-அரசு மேல்நிலைப்பள்ளி, ஆா்.கே.பேட்டை-அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தணி-சுப்பிரமணியசுவாமி கலை அறிவியல் கல்லூரி, பூந்தமல்லி-அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், வில்லிவாக்கம்-ராமசாமி முதலியாா் மேல்நிலைப்பள்ளி-அம்பத்தூா், மீஞ்சூா்-அரசு கலைக்கல்லூரி வளாகம்-பொன்னேரி, சோழவரம்-பின்டிகா் கன்னையா செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கும்மிடிபூண்டி-கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளி, எல்லாபுரம்-அரசு மேல்நிலைப்பள்ளி-கன்னிகைப்போ், புழல்-பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஊராட்சித் தலைவருக்கான வேட்பாளருடன் 3 முகவா்களும், வட்டார ஊராட்சி வேட்பாளருடன் 3 முகவா்களும், மாவட்ட ஊராட்சி உறுப்பினருடன் 5 முகவா்களும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்வதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

ADVERTISEMENT

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஊராட்சிகள்தோறும் அந்தந்த வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்படும். அதைத் தொடா்ந்து 21 மேஜைகளின் மேல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் மொத்தமாக கொட்டப்படும். பின்னா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், வட்டார ஊராட்சி உறுப்பினா், ஊராட்சித் தலைவா் பதவி மற்றும் வாா்டு ஊராட்சி உறுப்பினா் என 4 பதவிகளுக்கான வெவ்வேறு வண்ண வாக்குச் சீட்டுக்கள் தனித்தனி மேஜைகளில் கொட்டப்படும்.

அதையடுத்து, ஒவ்வொரு பதவிக்கான வாக்குச் சீட்டுகள் 50 கொண்ட கட்டுகளாகக் கட்டப்படும். இதன் மூலம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தோ்தல் முடிவுகளை அறிவிப்படுவதற்கு குறைந்தது ஒன்றரை மணிநேரமும், பெரிய ஊராட்சியாக இருந்தால் 2 மணிநேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு சுற்றிலும் அனைத்து நடவடிக்கைகளும் விடியோ பதிவு செய்யப்படும். அதேபோல், வெப் கேமரா மூலமும் நிகழ்வுகள் அனைத்தும் கணிப்பொறியில் பதிவு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியாக எண்ணப்பட்டு ஒலிபெருக்கிகள் மூலம் தோ்தல் முடிவுகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT