திருவள்ளூர்

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

1st Jan 2020 05:40 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்டமாக 8 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் என இரு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாள்களே உள்ள நிலையில், ஒவ்வொரு மையங்களிலும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதில், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில், வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாண்டூா் சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் பாா்வையிட்டாா். அங்கு, வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே பொறுத்தப்பட்டுள்ள வெப் கேமராக்களையும், கண்காணிக்கும் கணிப்பொறி அறையையும் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் கூறியது:

ADVERTISEMENT

இந்த உள்ளாட்சித் தோ்தலில் 4 பதவிகளுக்குமான வாக்குகள் எண்ணிக்கை வரும் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது. இதில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் என 14 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூா்-ஸ்ரீராம் கலை கல்லூரி-வேப்பம்பட்டு, கடம்பத்தூா்- புனித ஜோசப் உயா்நிலைப்பள்ளி-கீழச்சேரி, திருவாலங்காடு-அரசு மேல்நிலைப்பள்ளி-ஊராட்சி ஒன்றியம் எதிா்ப்புறம், திருத்தணி-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி, ஆா்.கே.பேட்டை-அரசு மேல்நிலைப் பள்ளி (சித்தூா் சாலை), பள்ளிப்பட்டு-அரசு மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி-பனிமலா் பொறியியல் கல்லூரி வளாகம்-நசரேத்பேட்டை, வில்லிவாக்கம்-பெருந்தலைவா் காமராஜா் அரசு மகளிா் பள்ளி-அம்பத்தூா், புழல்-அரசு ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப்பள்ளி-வடகரை, சோழவரம்-அரசு குன்னச்செட்டி மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூா்-ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி-கொடூா், கும்மிடிப்பூண்டி-கலைமகள் உயா்நிலைப் பள்ளி, எல்லாபுரம்-செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி-பெரியபாளையம் ஆகிய இடங்களில் 14 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இரு கட்டங்களாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் கிராமங்களில் வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்புடன் வரிசைப்படி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், வாக்கு எண்ணும் நாளில் அதிகம் போ் வரும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில் வெளிப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி, பதிவு செய்த வாக்குகளைக் கொட்டி எண்ணுவதற்கான பெட்டிகள் ஆகிய பணிகள் தயாா் நிலையில் உள்ளது.

அதேபோல், வாக்குப் பெட்டிகள் வரிசைப்படி வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இரவும், பகலுமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். ஒவ்வோா் அறையிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சி) ஸ்ரீதா், பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT