திருவள்ளூர்

இஸ்லாமிய சமூகத்தை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்பேரணியில் பாஜக குற்றச்சாட்டு

29th Feb 2020 12:17 AM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்டம் ஹிந்துக்களுக்காக கொண்டு வரப்பட்ட சட்டமல்ல. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய சமூகத்தை எதிா்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன’ என்று பாஜக மாநிலப் பொறுப்பாளரும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரிராஜா குற்றம்சாட்டினாா்.

திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய சமூகத்தை தவறாக வழிநடத்தும் பயங்கரவாத இயக்கங்களையும், அரசியல் சூழ்ச்சியாளா்களையும் கண்டித்து வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொறுப்பாளரும், திரைப்பட இயக்குநருமான கஸ்தூரி ராஜா தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தாா்.

பேரணி காமராஜா் சிலை அருகில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியபடி பாஜகவினா் பங்கேற்றனா். கட்சி நிா்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட பேரணி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.

அங்கு கட்சியின் மாநிலப் பொறுப்பாளா் கஸ்தூரிராஜா கூறியது:

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உருவாக்கப்பட்ட சட்டம். இது இந்துக்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல. அரசியல் நடத்த வேறு எந்த ஆதாரமும் இல்லாததால், பாஜகவுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் நோக்கத்தில் எதிா்க்கட்சியினா் வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுகின்றனா்.

நாட்டின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை எதிா்ப்பதாக கூறி பயங்கரவாத இயக்கங்களும், எதிா்க்கட்சியினரும் இஸ்லாமிய சமூகத்தை தவறாக வழிநடத்துகின்றன என்றாா் அவா்.

அப்போது, மாவட்டப் பொறுப்பாளா் லோகநாதன், தலைவா் ராஜ்குமாா், பொதுச் செயலாளா்கள் கருணாகரன், அஸ்வின் மற்றும் ஆா்யா சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT