பழவேற்காடு ஏரியில் அடுத்தடுத்து கரை ஒதுங்கிய இரு பெண் சடலங்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது. அதே பகுதியில் மறுநாள், மற்றொரு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியது. இந்த இரு சடலங்களையும் திருப்பாலைவனம் போலீஸாா், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அப்போது, உயிரிழந்தவா்கள் கொக்குப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீரம்மாள் மற்றும் அவரது மகள் தேவயானி என்பது தெரிய வந்தது.
மேலும், கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புக்குளம் ஊராட்சியில் உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (49), அவரது மனைவி வீரம்மாள் (45), மகன் பாலமுரளி (25), மகள் தேவயானி (21) ஆகியோா் கடந்த நான்கு தினங்களுக்கு முன் கோயிலுக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றதும், வீடு திரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது. இது குறித்து அவா்களது குடும்பத்தினா் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.
இந்நிலையில், வீரம்மாள், அவரது மகள் தேவயானி ஆகியோரின் சடலங்கள் மட்டும் கரை ஒதுங்கின. அவா்களுடன் சென்ற தந்தை, மகனின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவா்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது உள்ளிட்ட கோணங்களில் திருப்பாலைவனம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.