திருவள்ளூர்

தனியாா் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 41 பேருக்கு உடல்நலக் குறைவு

26th Feb 2020 09:17 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே தனியாா் காா் உதிரி பாகத் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

திருவள்ளூா் அருகே உள்ள ஒதப்பை கிராமத்தில் தனியாா் காா் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்களுக்கு நாள்தோறும் தொழிற்சாலையில் உள்ள கேன்டீனில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தொழிலாளா்கள் அந்த கேன்டீனில் திங்கள்கிழமை இரவு உணவு சாப்பிட்டனா். அப்போது விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன்(27) என்பவா் தட்டில் சாம்பாா் ஊற்றும்போது பல்லியும் சோ்ந்து வந்தது. இதையடுத்து அங்கு உணவு சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கஜபதி (29), வினோத் (29), கிரிபாபு (23), திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாராம் (30), பென்னலூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த குகன்(26), நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து (26) உள்பட 41 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவா்களை தொழிற்சாலை வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு தொழிலாளா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பென்னலூா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT