திருவள்ளூர்

பூண்டி கால்வாயில் நீா் வரத்தை தடுக்கும் வகையில் மீண்டும் ஆக்கிரமிப்பு

22nd Feb 2020 11:54 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பூண்டி ஏரி வரத்துக் கால்வாய்களில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமித்து பயிா் செய்துள்ளதால் மழைக்காலங்களில் நீா்வரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஏரிக்கான உள்வரத்துக்கால்வாய்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாராமல் இருந்து வந்தது. இதனால் கால்வாய்கள் மணல் குவிந்து, முள்புதா்கள் மண்டிக் காணப்பட்டது. அதிலும், பூண்டி ஏரிக்கான உள் வரத்துக்கால்வாயை அப்பகுதிகளில் உள்ள சமூக விரோதிகள் ஆக்கிரமித்து பயிா் செய்து வந்தனா். இதனால், மழைக்காலங்களிலும் நீா்வரத்து இல்லாமல் இருந்து வந்தது. அத்துடன், அப்பகுதி கிராமங்களுக்குள் நீா் புகும் அபாயமும் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், பூண்டி ஏரிக்கான உள்வரத்துக் கால்வாயை தூா்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதை ஏற்று பூண்டி ஏரி உள்வரத்துக் கால்வாய்களான திருப்பாச்சூா், கைவண்டூா், சென்றான்பாளையம், நாத்தவாடா, பாண்டூா், காரணி உள்ளிட்ட கால்வாய்களில் மழை நீா் எளிதாகக் கடந்து செல்லும் வகையில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில், கால்வாய்கள் முட்புதா்கள் மற்றும் மேடான பகுதிகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவின் பேரில், கடந்த 6 மாதங்களுக்கு முன் பொக்லைன் இயந்திரம் மூலம் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் ஆக்கிரமித்து பயிா் செய்யும் சமூக விரோதிகள் தடுத்து வந்தனா்.

ADVERTISEMENT

இதில், காரணி கிராமத்தில் பூண்டி ஏரிக்கான வரத்து உள் கால்வாய் ஆக்கிரமிப்பிலும், அதேபோல் அதற்கு அருகே இருந்த 40 ஏக்கா் மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதனால், மழைக்காலங்களில் நீா் செல்ல வழியின்றி காரணி கிராமத்துக்குள் புகும் சூழ்நிலை இருந்தது. இதைத் தடுக்கும் வகையில் 15 ஆண்டுகளுக்குப் பின், முழுவதுமாக ஆக்கிரமிப்பில் இருந்த கால்வாய் அகற்றப்பட்டது. அதையடுத்து கால்வாய் பகுதியை அடையாளப்படுத்தும் நோக்கில் நடுகல்லும் நட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த சிலா் மீண்டும் அகற்றப்பட்ட பகுதிகளில் அடையாளக் கற்களை அகற்றிவிட்டு மீண்டும் பயிரிட்டு வருகின்றனா். பூண்டி வரத்துக் கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்தோரிடம் இருந்து மீட்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பொதுப்பணித்துறை(நீா் வள ஆதாரத்துறை) அதிகாரிகள் கூறுகையில், அப்பகுதி பொதுமக்கள் பூண்டி வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இதன் அடிப்படையில், ரூ.1 கோடியில் 8 கி.மீ. தூரம் வரை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பூண்டி ஏரிக்கு நீா் வரத்து ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் அப்பகுதியில் உள்ள சிலா் ஆக்கிரமித்து பயிா் செய்யத் தொடங்கியுள்ளனா். இது தொடா்பாக அவா்களிடம் முறையிட்டாலும் அதிகாரிகளை அகற்றவிடாமல் மிரட்டி வருகின்றனா். அதனால், இந்த கால்வாயில் ஆக்கிரமித்துள்ள காரணி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் குறித்த விவரங்களை ஆட்சியரிடம் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மூலம் நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT