திருவள்ளூர்

புதுவாயலில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

13th Feb 2020 11:14 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலில் திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுக் கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசியது:

கூட்டத்தில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன் பேசுகையில், மாநெல்லூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு திட்டமிட்டு வரும் நிலையில், மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை மட்டும் கொண்டு வரவேண்டும், தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு 80 % வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

அதிமுக உறுப்பினா் ரோஜா ரமேஷ்குமாா், பூவலை, எகுமதுரை, தோக்கம்மூா் ஊராட்சிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா். ஏ.டி.நாகராஜ் பேசுகையில், முக்கரம்பாக்கம், நெல்வாய், புதுப்பாளையம் பகுதிகளை சோ்ந்த மக்கள் பயனடையும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றாா்.

திமுக உறுப்பினா் இந்திரா திருமலை பேசுகையில், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய புதுவாயலில் திருவள்ளூா் மாவட்டத்தில் அமைப்பதாக அரசு கூறிய மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும் என்றாா். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகக் கூறினாா். திமுக கவுன்சிலா் ஜெயச்சந்திரன் பேசுகையில், சிப்காட்டில் குடியிருப்புகளுக்கு இடையில் சாலைப் பணி அமைக்கும்போது கழிவு நீா் கால்வாய்களை உடைத்ததால் கழிவுநீா் தேங்கி பொதுசுகாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் ரவிகுமாா் பேசுகையில், ஒன்றியக் குழுக் கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும், சிப்காட்டில் 80% வடமாநிலத் தொழிலாளா்கள் பணிபுரியும் நிலையில், உள்ளூா் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறினாா். காங்கிரஸ் கவுன்சிலா் மதன்மோகன் பேசுகையில், ஒன்றியக் குழு அலுவலகத்தில் காமராஜா், திருவள்ளுவா் படங்களை வைக்க வேண்டும் என்றாா்.

சுயேச்சை உறுப்பினா் உஷா ரவி பேசுகையில், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம் பகுதி பழவேற்காடு உப்பங்கழி பகுதியை ஒட்டி உள்ளதால் அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக ஆழ்துளை கிணறு வசதியை ஏற்படுத்த எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்தாா். அதற்கு பதிலளித்த எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், கடந்த ஆண்டில் மட்டும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கும்மிடிப்பூண்டி தொகுதியில் 284 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்த நிலையில், சுண்ணாம்புகுளம் பகுதியில் ஆழ்துளைக் கிணறு வசதியை தமது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்வதாகக் கூறினாா்.

கூட்டத்தில், 26 வாா்டுகளில் ரூ. 1 கோடியே 2 லட்சத்து 80ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, ஆழ்துளைக் கிணறு அமைத்தல், நிழற்குடை அமைத்தல் உள்ளிட்டவற்றை செய்யவும், சுண்ணாம்புகுளம், ஆரம்பாக்கம், புதுகும்மிடிப்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளிகளில் ரூ. 6,73,000 மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடத்தை சீரமைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT