திருத்தணி நேரு நகா் பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருத்தணி நகராட்சி, 18-ஆவது வாா்டு நேரு நகா் வாட்டா் டேங்க் தெருவில், 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 20 நாள்களாக குழாயில் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த, 50-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீா் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி பொறியாளா், அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.