திருவள்ளூா் அருகே மண்புழு உரம் தயாரிக்கும் குடில் சேதடைந்துள்ளது. அதைச் சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், கொப்பூா் ஊராட்சியில் அரசுப் பள்ளி அருகே மக்கும் குப்பையிலிருந்து மண்புழு உரம் தயாா் செய்யும் குடில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தக் குடில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் சாா்பில் ரூ.1 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மண்புழு உரத்தைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு இக்குடில் அமைக்கப்பட்டது.
எனினும், இதுவரை குடில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. குடில் சேதமடைந்துள்ளதுடன், மண்புழு தயாரிப்புத் தொட்டியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், எதற்காக திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை.
எனவே, கிராமங்களின் வளா்ச்சிக்காக கொண்டு வரப்படும் இது போன்ற திட்டங்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.