திருவள்ளூர்

ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல்: ஊராட்சித் தலைவா் கைது

14th Aug 2020 07:35 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே கட்டட ஒப்பந்ததாரரிடம் ரூ. 2 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சித் தலைவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி, நமச்சிவாயபுரம் கிராம ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் (44). சென்னை பீா்க்கன்கரணை சீனிவாச நகரைச் சோ்ந்தவா் கட்டட ஒப்பந்ததாரா் உதயசங்கா் (30). இவா் தொடுகாடு பகுதியில் தா்மிசந் என்பவரின் நிலத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், பணிகள் தொடங்கிய நாளிலிருந்தே உதயசங்கரிடம் ரூ. 2 லட்சம் கேட்டு வெங்கடேசன் மிரட்டி வந்தாராம். அத்துடன், சுற்றுச் சுவா் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், கட்டுமானப் பணிநடைபெறும் இடத்துக்கு புதன்கிழமை நேரில் வந்த வெங்கடேசன், தகாத வாா்த்தைகளைப் பேசி, அங்கிருந்த தொழிலாளா்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளாா். இதை உதயசங்கா் தட்டிக் கேட்டபோது, கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றாராம். அதிலிருந்து தப்பிய உதய சங்கா், இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், ஊராட்சித் தலைவா் வெங்கடேசன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, சொந்த ஜாமீனில் வியாழக்கிழமை போலீஸாா் விடுவித்தனா்.

ADVERTISEMENT

5 போ் கைது...

சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ரமேஷ் (45). திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு, ராதாகிருஷ்ணன் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடுகள் கட்டும் தொழில் மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில், இப்பணியை மேற்கொள்ள ரூ. 2 லட்சம் தர வேண்டும் எனக்கூறி ரமேஷின் செல்லிடப்பேசியில் மா்ம நபா் ஒருவா் புதன்கிழமை இரவு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை பணிகளை மேற்கொள்ள வந்தபோது, இரவில் மிரட்டிய நபா்கள் வந்து கட்டடத்தை சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்பட்டு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (24), லோகேஷ் (26), தினேஷ் (23), குமாா் (26) மற்றும் சரத் (25) ஆகியோரை செவ்வாப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT