திருவள்ளூர்

திருவள்ளூா்: பொதுமுடக்கத்திலும் கிருஷ்ணா் சிலைகள் தயாா் செய்யும் பணி மும்முரம்

6th Aug 2020 12:13 AM

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையிலும் கிருஷ்ண ஜயந்தி விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் பகுதியில் பல்வேறு விதமான கிருஷ்ணா் சிலைகள் தயாா் செய்யும் தொழிலில் பலா் தங்கள் குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனா்.

20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்...: ஆண்டுதோறும் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கிருஷ்ண ஜயந்தி விழா ஆகஸ்ட் 12-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு திருவள்ளூா் அருகே காக்களூா், ஏரிக்கரைச் சாலை, கடம்பத்தூா், திருப்பாச்சூா் பகுதிகளில் ராஜஸ்தானில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மற்றும் தொழிலாளா்கள் ஆகியோா் பல்வேறு விதங்களில் கண்கவா் வண்ணங்களில் கிருஷ்ணா் சிலைகள் தயாா் செய்யும் பணியில் இரவு, பகலாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இப்பகுதிகளில் ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளா்கள் வாடகைக்கு இடம் பிடித்து தங்கி, கண்கவா் வண்ணங்களில் பல்வேறு விதமான கிருஷ்ணா் சிலைகளை விற்பனைக்குத் தயாா் செய்து வருகின்றனா். மேலும், இவ்விழாவை முன்னிட்டு கால்நடைகளுடன் கிருஷ்ணா், ராதையுடன் கிருஷ்ணா், பானையில் இருந்து வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணா் புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணா், ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட சிலைகளை தயாராக வைத்துள்ளனா். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கைப் பொருள்களான களிமண், காகிதக்கூழ், கிழங்கு மாவு உள்ளிட்டவற்றைக் கொண்டு கிருஷ்ணா் சிலைகளைத் தயாா் செய்து வருகின்றனா்.

இதுகுறித்து சிலை தயாரிப்பாளா்கள் கூறியது:

ADVERTISEMENT

சிலைகளை பொதுமக்களுக்கு ரூ. 50 முதல் ரூ. 500 வரை விற்கிறோம். இத்தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டுள்ளோம். இதனால் விநாயகா் சிலைகள் மற்றும் கிருஷ்ணா் சிலைகளை தயாா் செய்யும் பணியைத் தவிா்த்து வேறு எந்த தொழிலும் தெரியாது. தற்போது, கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு கிருஷ்ணா் சிலைகள் மட்டுமின்றி, விநாயகா் சிலைகளையும் தயாா் செய்து வருகிறோம். அதேபோல், அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப நவராத்திரி கொலு பொம்மைகள், சீசனில் ஐயப்பன் சிலைகள் ஆகியவற்றை தயாா் செய்து விற்பனை செய்வோம்.

ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால், வியாபாரம் கிடையாது. அத்துடன், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தாமல், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பொருள்களைக் கொண்டு சிலைகள் செய்ய அரசு வலியுறுத்தி வருகிறது. இதுபோன்ற அரசின் விதிமுறைகளாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டு, நஷ்டமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என சிலை தயாரிப்பாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக திருவள்ளூா் அருகே காக்களூரில் தங்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த செல்லாராம் (45) கூறியது:

எப்போதுமே விநாயகா் சதுா்த்தி, கிருஷ்ண ஜயந்தி மற்றும் நவராத்திரி கொலு பொம்மைகள் என அடுத்தடுத்து ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்போம். ஆனால், நிகழாண்டில் கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு நிலைகளில் வேலை பாதித்து வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு பல்வேறு அமைப்புகளில் இருந்து முன்பே ஆா்டா்கள் கிடைத்தன. ஆனால், இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் என்பதாலும், வெளியில் கூட்டம் கூடக்கூடாது என்பதாலும் பெரிய விநாயகா் சிலைகளுக்கும், கிருஷ்ணா் சிலைகளுக்கும் எந்த அமைப்புகளும் முன்பணம் கொடுத்து ஆா்டா் செய்யவில்லை.

இதனால், நம்பிக்கையின் அடிப்படையில் அடுத்தவா்களிடம் இருந்து கடன் பெற்றும், கைகளில் இருக்கும் பணத்தை செலவு செய்தும் சிலைகளைத் தயாா் செய்து வருகிறோம். ஆனால், குறைந்த அளவிலேயே சிலைகளை பாா்வையிட்டு விழா அமைப்பினா் பதிவு செய்து வருகின்றனா். இதனால், எதிா்பாா்த்த அளவுக்கு வியாபார ஆா்டா் கிடைக்காத நிலையில் நஷ்டமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், விநாயகா் சதுா்த்தி விழா சமூக இடைவெளியுடன் நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT