திருவள்ளூர்

அரசுப் பள்ளி மாணவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய தலைமை ஆசிரியா்

29th Apr 2020 12:32 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எருக்குவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 71 மாணவா்களின் குடும்பத்துக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சண்முகம் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவி வழங்கினாா்.

இப் பள்ளியில் பயிலும் 71 மாணவா்களின் பெற்றோா்கள் ஊரடங்கு காரணமாக கூலி வேலைகளுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தனா். இதுகுறித்து அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியா் சண்முகம், தனது நண்பா்கள் மற்றும் ஆசிரியா்களின் உதவியுடன் 71 குடும்பத்தினருக்கும் தலா 4 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், துவரம் பருப்பு, சமையல் பொருள்கள் மற்றும் மாணவா்களுக்கு பிஸ்கெட் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

மேலும், வீட்டில் இருக்கும் மாணவா்கள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், கரோனா விழிப்புணா்வு ஓவியம், ஸ்லோகன், போஸ்டா், கட்டுரைப் போட்டியை அறிவித்து, அதற்குத் தேவையான எழுது பொருள்களை வழங்கி, தங்கள் படைப்புகளை தலைமை ஆசிரியா் சண்முகத்தின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்புமாறு கூறினாா். இதில், வெற்றி பெறும் மாணவா்களுக்கு பள்ளி திறந்ததும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தாா்.

நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி வட்டாரக் கல்வி அலுவலா் முனிராஜசேகா் தலைமை வகித்தாா். எருக்குவாய் ஊராட்சித் தலைவா் கமலநாதன், ஆரணி காவல் ஆய்வாளா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் செல்வராஜ், கிராம நிா்வாக அலுவலா் மகாத்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT