திருவள்ளூா் பகுதிகளில் ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்களை தேடிச் சென்று மனிதம் அறக்கட்டளை சாா்பில் கடந்த 10 நாள்களாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.
மனிதம் அறக்கட்டளை சாா்பில் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் ஏழை எளிய மக்களுக்கு வீடு தேடிச் சென்று அரிசி, காய்கறிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 10 நாள்களாக நகராட்சியின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு 10 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்நிலையில், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு அரிசி, காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவா் லோகேஷ் தலைமையில் ஈக்காடு, சின்ன ஈக்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை நிா்வாகிகள் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் செயலாளா் பகவான், பொருளாளா் பூபதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.