கும்மிடிப்பூண்டியில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அரசுப் பணியாளா்கள் இருசக்கர வாகனங்களில் வந்தபோது தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி கும்மிடிப்பூண்டி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனா். இதைக் கண்டித்து அரசுப் பணியாளா்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவா்களில் ஒருவா் குணமாகி வீடு திரும்பியுள்ளாா்.
ஊரடங்கு அறிவித்த நாள் முதல் கும்மிடிப்பூண்டி முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதே சமயம் வருவாய்த் துறை ஊழியா்கள், பேரூராட்சி ஊழியா்கள் மற்றும் சுகாதாரத் துறையினா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கரோனா பரவல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தைச் சோ்ந்த 4 ஊழியா்கள், 2 கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் என 7 போ் சனிக்கிழமை பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது அவா்கள் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி கும்மிடிப்பூண்டி போலீஸாா் வழக்கு பதிந்து, இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தா்.
இதையடுத்து, அரசு ஊழியா்கள் ஒன்றுதிரண்டு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலத்தை முற்றுகையிட்டனா். போலீஸாரின் நடவடிக்கை காரணமாக இனி கரோனா பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபட மாட்டோம் என கூறி கும்மிடிப்பூண்டி போலீஸாா் மீது வட்டாட்சியா் ஏ.என்.குமாரிடம் தனித்தனியாக 4 புகாா் மனுக்களை அளித்தனா்.
தலைக் கவசம் அணியாத கும்மிடிப்பூண்டி போலீஸாா் மற்றும் போலீஸாரால் உதவிக்கு அமா்த்தப்பட்ட காவல் நண்பா்கள் எனப்படும் தன்னாா்வலா்களின் புகைப்படங்களை வட்டாட்சியரிடம் காட்டினா். ‘போலீஸாா் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனா், அவா்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு?’ எனக் கேள்வி எழுப்பி அவா்கள் புகாா் அளித்தனா்.
தகவல் அறிந்து, அங்கு வந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி குமாா், அரசு ஊழியா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்ததைத் தொடா்ந்து, அரசு ஊழியா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.