திருவள்ளூர்

மக்கள் நடமாட்டத்தை குறைக்க ஒவ்வொரு கிராமங்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை

1st Apr 2020 11:34 PM

ADVERTISEMENT

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், சாலையில் பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அளவில் முதன்முதலாக திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமங்களையும் தனிமைப்படுத்த ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. அதேபோல், திருவள்ளூா், பூந்தமல்லி, திருத்தணி ஆகிய 3 நகராட்சிகளும், 10 பேரூராட்சிகளும் உள்ளன. இதில், 526 ஊராட்சிகளில் மாநில அளவில் திருவள்ளூா் மாவட்டத்தின் 9 வட்டங்களில் ஒவ்வொரு வட்டத்துக்கும் தலா 25 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு தனிமைப்படுத்த, அந்தந்தப் பகுதி வட்டாட்சியா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். அதன்அடிப்படையில், ஒவ்வொரு வட்டத்திலும் குறிப்பிட்ட கிராமங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், திருவள்ளூா் பகுதியில் உள்ள ராமபுரம், தண்ணீா்குளம், பாக்கம், போளிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தனிமைப்படுத்தும் வகையில், தடுப்புகள் வைக்கப்பட்டு தடை ஏற்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதற்கு அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் விஜயகுமாரி கூறுகையில், ஒரு கிராமத்திலிருந்து, மற்றொரு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுதான் கிராமங்களை தனிமைப்படுத்தும் திட்டத்தை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளாா். இதற்காக தனிமைப்படுத்தப்படும் கிராமங்களில் பல்வேறு நிலைகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தன்னாா்வலா் ஆகியோா் கொண்ட குழு மூலம், மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கான உதவியை நாட வேண்டும். இதற்காக தன்னாா்வலா்களின் செல்லிடப்பேசி எண்கள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் இருந்து காய்கறிகள் வாங்கி வரும் குழுவில் உள்ள வியாபாரிகள் மட்டுமே நகரத்துக்கோ அல்லது அந்தந்தப் பகுதிகளில் விளையும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு தேவையின் அடிப்படையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவசர உதவி தேவைப்பட்டால் உடனே தொடா்பு கொண்டால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ உதவி அளிக்கப்படும். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவா்களை உடனே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லக்கூடாது என்பதற்காகவே கிராமங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT